கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட தம்பி கைது

விழுப்புரத்தில் கூலி தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த அவருடைய தம்பி கைது செய்யப்பட்டார்.

Update: 2017-03-19 23:00 GMT

விழுப்புரம்,

குடிபோதையில் தகராறு

விழுப்புரம் காகுப்பம் இந்திராநகர் மாணிக்கம் லே–அவுட்டை சேர்ந்தவர் லூர்து மகன் சூசைநாதன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 17–ந்தேதி குடிபோதையில் வந்து மனைவி மலரிடம் தகராறு செய்தார். அதன்பிறகு அதே பகுதியில் உள்ள தனது தம்பியான தேவராஜ் (38) வீட்டிற்கு சென்று அவரிடமும் தகராறு செய்தார். அப்போது தேவராஜை சூசைநாதன் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், தனது வீட்டிற்குள் சென்று காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து அசூசைநாதனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தேவராஜ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இது பற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தேவராஜை வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் விழுப்புரம் ரெயில்வே குடியிருப்பில் தேவராஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த தேவராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தேவராஜ் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:– என்னுடைய அண்ணன் குடித்து விட்டு வந்து தினமும் அண்ணியிடம் பிரச்சினை செய்து வந்தார். அதோடு மட்டுமின்றி என்னிடமும் வந்து தகராறு செய்து வந்தார். இது பற்றி பல முறை அவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. சம்பவத்தன்றும் அதேபோல் குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தேவராஜை போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்