மு.க.ஸ்டாலின், பன்னீர் செல்வம் எண்ணங்கள் நிறைவேறாது இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பவர்கள் முடங்கி போவார்கள் அமைச்சர்கள் சீனிவாசன், செல்லூர் ராஜூ பேச்சு
மு.க.ஸ்டாலின், பன்னீர் செல்வம் எண்ணங்கள் நிறைவேறாது.
மதுரை,
ஜெயலலிதாவின் 69–வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு தொகுதி சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செல்லூரில் நடந்தது. மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜன்செல்லப்பா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:–
மதுரை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அரசு செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்த போது ஏன் புகைப்படத்தை காட்டவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதி 111 நாட்களாக உடல்நலமில்லாமல் இருக்கிறார். இவரது புகைப்படத்தை வெளியிடாத மர்மம் என்ன?. தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கருணாநிதி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இரட்டை இலை சின்னம்அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது கூறியதாவது:–
மு.க.ஸ்டாலினும், பன்னீர் செல்வமும் இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள் நிறைவேறாது. இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பவர்கள், விரைவில் முடங்கி போவார்கள்.
ஸ்டாலின் பொதுவினியோகத்திட்டத்தில் குறை இருப்பதாக கூறி வருகிறார். இதே கடந்த தி.மு.க.ஆட்சியில் பொது வினியோகத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியது. தி.மு.க. ஆட்சியில் 1 கிலோ துவரம் பருப்பு வெளி மார்க்கெட்டில் ரூ.56–க்கும் ரேஷன் கடைகளில் ரூ.36–க்கும் விற்கப்பட்டது. உளுந்து வெளிமார்க்கெட்டில் ரூ.50–க்கும், ரேஷன் கடைகளில் ரூ.40–க்கும், பாமாயில் வெளிமார்க்கெட்டில் ரூ.50–க்கும், ரேஷன் கடைகளில் ரூ.40–க்கும் விற்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் வெளிமார்க்கெட்டில் 1 கிலோ உளுந்து ரூ.170–க்கு விற்கப்பட்ட போது ரேஷன் கடைகளில் வெறும் ரூ.30–க்குத்தான் வழங்கப்படுகிறது. அதே போல் பாமாயில் வெளிமார்க்கெட்டில் ரூ.80–க்கு விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ரூ.25–க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
1 லட்சம் வாக்குகள்அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது
அ.தி.மு.க.வால் எம்.எல்.ஏ.வான பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு போடி தொகுதியில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது. தற்போது சிலர் இரட்டை இலை சின்னம் பற்றி சில செய்திகளை பரப்பி வருகின்றனர். எங்கள் தரப்பில் உள்ள நியாயமான கருத்துக்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். அவை அனைத்தும் மிகச்சரியாக இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எப்படி உத்தரபிரதேசத்தில் சின்னம் தொடர்பாக நடைபெற்ற பிரச்சினையில் அகிலேஷ்யாதவிற்கு சின்னம் கிடைத்ததோ, அதே போல் அ.தி.மு.க.விற்கும் இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைக்கும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தில் நின்று ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.