ராயக்கோட்டை அருகே விவசாயி மர்மச்சாவு கொலையா? போலீஸ் விசாரணை

ராயக்கோட்டை அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2017-03-19 22:30 GMT

ராயக்கோட்டை

விவசாயி பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது கொப்பகரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தூர்வாசன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

மேலும் இது தொடர்பாக அவர்கள் சூளகொண்டா கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்தித்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமணன், சப்–இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

சொத்து பிரச்சினை

பிணமாக கிடந்த தூர்வாசனின் நெற்றி பகுதியிலும், கழுத்து பகுதியிலும் லேசான காயம் இருந்தது. மேலும் அருகில் காலி மதுபாட்டிலும், பூச்சிக்கொல்லி மருந்தும் இருந்தது. இதைத் தொடர்ந்து தூர்வாசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மமான முறையில் இறந்த தூர்வாசனுக்கு 2 மனைவிகள் இருந்தனர். அவர்கள் 2 பேரும் தற்போது இறந்து விட்டனர். மூத்த மனைவி சரஸ்வதி மூலமாக ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. 2–வது மனைவி மூலமாக விஷ்ணு (11) என்ற மகன் உள்ளான். அவன் 6–ம் வகுப்பு படித்து வருகிறான். தூர்வாசனுக்கும், சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சந்தேக மரணம் பிரிவில் வழக்கு

இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் விவசாய நிலத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தாரா? என தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்