7–வது ஊதியக்குழு பரிந்துரை அறிக்கையை வெளியிடக்கோரி நாடு தழுவிய போராட்டம் அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

7–வது ஊதியக்குழு பரிந்துரை அறிக்கையை வெளியிடக்கோரி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.;

Update: 2017-03-19 23:15 GMT

சேலம்,

தேசிய செயற்குழு கூட்டம்

அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஐபெக்டோ) தேசிய செயற்குழு கூட்டம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பேராசிரியர் கேசவ் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் அருண்குமார், கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர்கள் கிருஷ்ணகுமார், ஜெயகுமார், பொதுச்செயலாளர் நடராஜன் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பேராசிரியர் சவுகான் தலைமையில் அமைக்கப்பட்ட 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்காத மத்திய அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினர்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சேலம் முத்துகிருஷ்ணன் மர்மமான சூழ்நிலையில் உயிர் இழந்ததற்கு செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் அதே வேளையில், மிக விரைவாக இதற்கு காரணமான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், ஊழியர் நலனுக்கு எதிரான சி.பி.எஸ். முறை கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேட்டி

கூட்ட முடிவில் தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பின் தேசிய தலைவர் பேராசிரியர் கேசவ் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் அருண்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

ஆசிரியர்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் போது ஐபெக்டோ என்ற ஆசிரியர் கூட்டமைப்பின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படாதது இதுவரை நடந்திராத நடைமுறையாக உள்ளது. பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டிய 7–வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய ஒன்றாக மட்டுமில்லாமல், ஜனநாயக நடைமுறைகளுக்கு உகந்ததாகவும் இல்லை.

நாடு தழுவிய போராட்டம்

மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாடு தழுவிய அளவிலான போராட்டத்தை நடத்தும் நிலைக்கு எங்களை தள்ளியுள்ளது. 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க கோரி, முதற்கட்டமாக அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் ஐபெக்டோவும் அதன் உறுப்பு அமைப்புகளும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவிற்கும் கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் 19–ந் தேதி ஊதியக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமல்படுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் கூட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசின் பாராமுக நடவடிக்கையால் போராட்டம் நடத்துவதை தவிர்த்து வேறு வழியில்லை. இந்த சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்