மகுடஞ்சாவடி அருகே தறித்தொழிலாளி கொலை வழக்கு; கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது

மகுடஞ்சாவடி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தறித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்

Update: 2017-03-19 23:00 GMT

இளம்பிள்ளை,

தறித்தொழிலாளி அடித்துக்கொலை

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த அ.தாழையூர் பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் காலையில் கச்சுப்பள்ளி கிராமம் பாலிக்காட்டை சேர்ந்த விசைத்தறித்தொழிலாளி செல்வம்(வயது 32) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செல்வத்தின் கள்ளக்காதலி பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அவரை 2 வாலிபர்களுடன் சேர்ந்து கொலை செய்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பிணத்தை வீசி சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது

இது தொடர்பாக செல்வத்தின் கள்ளக்காதலியான அதே பகுதியைச் சேர்ந்த வாணவெடி தயாரிக்கும் பிரபா(32) மற்றும் அவருடன் வாணவெடி தயாரிக்கும் வேலை பார்த்து வந்த குமார்(22), குமரேசன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து போலீசார் கூறியதாவது:–

விசைத்தறி தொழிலாளியான செல்வத்துக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்து வந்த பிரபாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. பிரபாவின் கணவர் கோவிந்தன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரபாவுக்கும், செல்வத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு சென்றனர்

சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு பிரபா வீட்டுக்கு சென்ற செல்வம், பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரபாவை அவர் தாக்கியதாக தெரிகிறது. உடனே பிரபா தன்னிடம் பணியாற்றும் சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார், ஓமலூர் அருகே உள்ள கருத்தானூரை சேர்ந்த குமரேசன் ஆகியோரிடம் செல்வத்தை தடுத்து தாக்குமாறு கூறி உள்ளார். உடனே அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து குமரேசன், செல்வத்தை தாக்கியதில் அவர் இறந்து போனார்.

பின்னர் குமரேசனின் மோட்டார் சைக்கிளில் செல்வத்தின் உடலை வைத்துக்கொண்டு பிரபா பின்னால் பிடித்து கொள்ள அ.தாழையூரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று செல்வத்தின் உடலை வீசினர். அப்போது செல்வத்தின் மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டி வந்தார். அவர்கள் பிணத்தை வீசிய இடத்திற்கு வந்த போது, செல்வத்தின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போனதால் குமார் அந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டார்.

பின்னர் குமார், பிரபாவுடன் சேர்ந்து குமரேசனின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தற்போது கள்ளக்காதலி உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்