தோல்விகளை கண்டு பயந்து விடாமல் மாணவர்கள் வெற்றிகளை நோக்கி செல்ல வேண்டும் துணை வேந்தர் பாஸ்கர் பேச்சு
மாணவர்கள் தோல்விகளை கண்டு பயந்துவிடாமல் வெற்றிகளை நோக்கி செல்ல வேண்டும்
சிவகாசி,
சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர்.ஆர்.மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். டீன் மாரிச்சாமி வரவேற்று பேசினார். பி.எஸ்.ஆர். கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணியன், பி.எஸ்.ஆர்.ஆர்.பெண்கள் கல்லூரியின் முதல்வர் ராமசாமி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினரை பேராசிரியர் புனிதா அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் நெல்லை மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் பேசியதாவது:–
வெற்றிசிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர்.ஆர். பெண்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்கான இந்த கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அதில் கல்லூரி நிர்வாகம் வெற்றியும் கண்டுள்ளது. இந்த கல்லூரியில் படித்த பல மாணவர்கள் தற்போது பெரிய பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் இந்த கல்லூரி முதல் 10 இடத்தில் இருப்பது பெருமையான விஷயம் தான்.
ஆர்வம்தமிழ்வழி பள்ளி படிப்பை முடித்த பல மாணவர்கள் அடுத்து பட்டப்படிப்பு படிக்கும் போது ஆங்கிலத்தில் அதிகளவில் ஆர்வம் செலுத்து வதில்லை. இதனால் அவர்கள் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதை தவிர்க்க மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்க, பேச அதிக ஆர்வம் காட்ட வேண்டும். வேலை கொடுக்கும் நிறுவனம் தனது ஊழியர் ஆங்கிலத்தில் புலமை பெற்ற இருக்க வேண்டும் என்று தற்போது எதிர்பார்க்கிறது. இதை நிறைவேற்றி தரும் வகையில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களின் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில அறிவு இருந்தால் தமிழகத்தை தாண்டி இந்தியாவில் எந்த பகுதியில் வேலை கிடைத்தாலுமம் அந்த பணியை சிறப்பாக செய்ய முடியும்.
வளர்ந்த நாடுகள்....அதே நேரத்தில் நமது தாய்மொழியை மறந்து விடக்கூடாது. தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டும். ஒரு காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று இருந்தது, தற்போது மாதா, பிதா, குகூல், குரு என்று மாறிவிட்டது. மாணவ, மாணவிகளிடம் கேள்வி கேட்கும் திறன் இருக்க வேண்டும். அப்போது தான் புதிய புரிதல் ஏற்படும். புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்ய முடியும். புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யும் நாடு தான் வளர்ந்த நாடுகள் வரிசையில் சேருகிறது. கல்லூரி படிப்பு முடிந்தவுடன் உங்கள் தேடல் நின்றுவிடக்கூடாது. பட்டம் பெற்ற பின்னரும் நீங்கள் படித்து கொண்டு தான் இருக்க வேண்டும். எல்லா விஷயமும் தெரிந்த ஒருவர் கண்டிப்பாக இருக்க முடியாது. நமக்கு கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் தான் பல விஷயங்கள் நமக்கு தெரியவரும்.
முயற்சிநீங்கள் நல்ல முறையில் படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்க கூடாது. நல்ல முறையில் படித்து 10 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உங்கள் தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். வேலை தேடுவதை விட வேலை கொடுக்க படிப்பது நல்லது. ஒரு முறை தோல்வி அடைந்து விட்டால் பின்னர் அடுத்த முறை முயற்சி செய்வதை விட்டுவிடக்கூடாது. எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் பயப்படாமல் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலைநிகழ்ச்சிமுன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, சமூக விழிப்புணர்வு நாடகம் ஆகியவை நடைபெற்றது. இதில் இலங்கை கப்பல் படை வீரர்களால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவத்தை மாணவர்கள் நாடகமாக நடித்து காட்டினார். பல்வேறு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் 150 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டினை வழங்கி பேராசிரியர்களுக்கும், ஆய்வு கட்டுரை வெளியிட்ட பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் பிச்சிப்பூ நன்றி கூறினார்.