சிங்கம்புணரி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், பேரூராட்சி சார்பிலும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிங்கம்புணரி பகுதியில் மழை இல்லாததால் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தநிலையில் சிங்கம்புணரி தெற்கு தெருவில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு பெறப்பட்டு, குடிநீர் திருடுவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சிங்கம்புணரி போலீசார் ஆகியோர் தெற்குதெருவில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வசித்து வரும் கல்பனா என்பவரின் வீட்டில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பெறப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எச்சரிக்கைபின்னர் பேருராட்சி செயல் அலுவலர் முனியாண்டி கூறும்போது, குடிநீர் பற்றாக்குறை நிலவும் நேரத்திலும் சிங்கம்புணரி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முறையாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தவர்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. எவரேனும் அனுமதி இன்றி குடிநீர் இணைப்பு செய்து குடிநீர் திருடினால் எதிர்காலத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட மாட்டாது. பின்னர் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனுமதியின்றி மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவது கண்டறியப்பட்டால், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.