தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 83 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5¼ கோடி கடனுதவி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 83 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு

Update: 2017-03-19 23:00 GMT

சேத்துப்பட்டு,

கடனுதவி வழங்கும் விழா

சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், கூட்டுறவு சங்க தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்னாள் கவுன்சிலர் வக்கீல் ஜெயசங்கரமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 83 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,066 பேருக்கு ரூ.5¼ கோடி மதிப்பில் பட்டுநெசவு செய்யவும், மண்பாண்ட தொழில் செய்யவும், கறவைமாடு வளர்க்கவும் கடனுதவி வழங்கி பேசியதாவது:–

3 தானிய சேமிப்பு கிடங்குகள்

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் ரூ.36½ லட்சம் மதிப்பில் தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வளாகத்தில் 3 தானிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன. தேவிகாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 258 சிறு, குறு விவசாயிகளின் ரூ.1 கோடியே 29 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

சேத்துப்பட்டு பகுதியில் கடந்த 2015–16–ம் ஆண்டில் 514 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 88 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க 16 பேருக்கு ரூ.6 லட்சம் கடனுதவி மற்றும் 460 பொதுமக்களுக்கு ரூ.12 கோடியே 87 லட்சம் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை

பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ரே‌ஷன் கடைகளில் ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரே‌ஷன் கடைகளில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்பட்டுள்ளது. பொது வினியோக திட்டத்தில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சேத்துப்பட்டு தாசில்தார் சாந்தி, மண்டல தாசில்தார் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னக்குழந்தை, சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர் ராகவன், கூட்டுறவுசங்க செயலாளர் குப்பன், பண்டகசாலை தலைவர் பெருமாள், துணைத்தலைவர் ரவி, தேவிகாபுரம் கிளைசெயலாளர் சீனிவாசன், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராதாஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்