மரத்தில் மோதி சொகுசு கார் தீப்பிடித்தது: கார் பந்தய வீரர், மனைவியுடன் உடல் கருகி பலி

சென்னையில் மரத்தில் மோதி சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததில் கார் பந்தய வீரர், மனைவியுடன் உடல் கருகி பலியானார்.;

Update:2017-03-19 04:18 IST
சென்னை,

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் அஸ்வின் சுந்தர்(வயது 28). பிரபல கார் பந்தய வீரர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி டாக்டர் நிவேதாவுடன் பி.எம்.டபிள்யூ. சொகுசு காரில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தார்.

அங்கு இருவரும் சந்தோ‌ஷமாக பொழுதை கழித்துவிட்டு ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு இரவு உணவுக்காக சென்றனர். காரை அஸ்வின் சுந்தர் ஓட்டினார். நள்ளிரவு நேரம் சாலை வெறிச்சோடி இருந்ததால் அஸ்வின் காரை அதிவேகமாக ஓட்டி வந்தார். அவரது மனைவி டாக்டர் நிவேதா பயமின்றி அஸ்வின் சுந்தர் கார் ஓட்டும் திறமையை ரசித்தபடி இருந்தார்.

நள்ளிரவு 1.15 மணியளவில் பட்டினப்பாக்கம் அம்பேத்கர் மணிமண்டபம் அருகே கார் வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையை அஸ்வின் கவனிக்க தவறிவிட்டார். இதனால் வேகத்தடையில் ஏறிய வேகத்தில் திரைப்படங்களில் வருவது போன்று கார் சிறிது தூரம் பறந்து சென்றது.

கார் தீப்பிடித்தது

கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த காட்சியை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எரிந்துகொண்டிருந்த கார் திடீரென வெடித்ததால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலைபார்த்து வரும் திருவல்லிக்கேணியை சேர்ந்த அஜய்பூஜாரி(42) கார் தீப்பிடித்து எரிவது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலையத்துக்கும் உடனடியாக தகவல் பரிமாறப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர், தேனாம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 1.50 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்தனர். 10 நிமிடம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக உருக்குலைந்தது.

உடல் கருகி பலி

காருக்குள் அஸ்வின் சுந்தரும், நிவேதாவும் உட்கார்ந்தநிலையில் கருகி கரிக்கட்டையாக பிணமாக கிடந்தனர். காரில் இருந்த பாதுகாப்பு பலூன் வெடித்து அவர்கள் உடலுடன் ஓட்டி இருந்ததால் இருவரது உடலையும் உடனடியாக வெளியே எடுக்க முடியவில்லை.

கிரேன் உதவியுடன் கார் கதவை உடைத்து அஸ்வின், நிவேதா உடலை 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்துவந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா 2 பிரிவுகளின்கீழ் (அதிவேகமாக காரை ஓட்டுதல், உயிர் இழப்பை ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அஸ்வின் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் போலீசார் விசாரணையில், அஸ்வினுக்கு குடிப்பழக்கம் இல்லை என்பதும், அவர் குடிக்கவில்லை என்பதும் உறுதியானது.

இன்று இறுதிச்சடங்கு

கார் பந்தய வீரர் அஸ்வின், அவருடைய மனைவி டாக்டர் நிவேதாவின் உடல் பிரேத பரிசோதனை நேற்று நடந்து முடிந்தது. போரூர் மின்மயானத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. தங்களது மகள் நிவேதா பலியான தகவல் அறிந்து அவருடைய பெற்றோர் குமரன், சகிலா நேற்று சென்னை வந்தனர்.

அஸ்வின் சுந்தரின் மரணம் விளையாட்டு பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் பெடரே‌ஷன் தலைவர் அக்பர் இப்ராஹிம் கூறுகையில், ‘‘கார் பந்தய விளையாட்டுக்கு இது ஒரு துயரமான நாள். உண்மையான ஒரு பந்தய வீரரை இந்த விளையாட்டு இழந்து இருக்கிறது. அஸ்வின் சுந்தர் பழகுவதற்கு அற்புதமான மனிதர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்’’ என்றார்.

வீரர்கள் இரங்கல்

கார் பந்தய வீரர் கருண் சந்தோக், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரும் அஸ்வின் சுந்தரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  

மேலும் செய்திகள்