விவசாயத்தை மையமாக கொண்டு பட்ஜெட் தயாரிப்பு நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ.8,233 கோடி

நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ.8 ஆயிரத்து 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது விவசாயத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்றும் நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் அறிவித்தார்.

Update: 2017-03-18 22:34 GMT
மும்பை,

நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ.8 ஆயிரத்து 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது விவசாயத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்றும் நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் அறிவித்தார்.

பட்ஜெட்


2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, சட்டசபையில் சுதீர் முங்கண்டிவார் பேசியதாவது:-

மராட்டியத்தின் 12 கோடி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை நான் தாக்கல் செய்கிறேன். இது இந்த அரசின் 3-வது பட்ஜெட். நகர்ப்புற வளர்ச்சிக்காக மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக வளர்ச்சி வீதம் 5.4 சதவீதத்தில் இருந்து 9.4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி வீதத்தை காட்டிலும், மராட்டியத்தின் வளர்ச்சி வீதம் இரண்டு சதவீதம் அதிகம். வரும்காலத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி வீதத்தை நாம் எட்டுவோம்.

விவசாயத்துறை

மாநிலத்தில் 50 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்திருக்கின்றனர். ஆனால், மராட்டியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 10.5 சதவீதம் தான் இருக்கிறது. பல்வேறு காரணிகளால் ஏற்படும் குறைவான உற்பத்தி திறன், போதிய நீர்ப்பாசன வசதி இன்மை மற்றும் பருவகாலத்தை சார்ந்து இருத்தல் ஆகியவை விவசாயத்துக்கு பெரும் சவாலாக திகழ்கின்றன.

2017-18-ம் நிதி ஆண்டில் நீர்வளத்துறைக்கு ரூ.8 ஆயிரத்து 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

ஜல்யுக்தா ஷிவார் திட்டம்

வறட்சியை எதிர்கொள்ளவும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மராட்டிய அரசு கொண்டு வந்த முன்னணி திட்டம், ஜல்யுக்தா ஷிவார் திட்டம். ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் கிராமங்களை வறட்சியின் பிடியில் இருந்து இத்திட்டம் மீட்கும். இத்திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.1,600 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ், கடந்த 2011-12-ம் ஆண்டு முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 562 கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. இதில், 59 ஆயிரத்து 348 பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்தன.

விவசாய பம்புகள்


விவசாய பம்புசெட்டுகளுக்கு மின்சார வசதி அளிக்கவும், கிழக்கு விதர்பாவில் நிலவும் பின்னடைவை போக்கவும் ரூ.979 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், பெரும்பாலான பகுதிகளை நுண்ணிய நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நுண்ணிய நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் 30 முதல் 40 சதவீத நீரை சேமிக்கலாம்.

சந்தைப்படுத்துதல் துறை

விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு நியாயமான, லாபகரமான விலை பெறவும், அவர்களது வருமானம் இரட்டிப்பு ஆகவும் சந்தைப்படுத்துதல் துறை எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கிறது. மேலும், விவசாயிகளுக்கு குடோன் வசதி, விளைபொருட்களை மதிப்பிடுதல், நேரடி சந்தை வசதி மூலம் சந்தையில் போட்டியை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங் துறை ஆதரவு அளிக்கிறது.

விவசாய கடன்

விவசாயிகள் கடன் பிரச்சினையில் இருந்து விடுபட அரசு கடமைப்பட்டிருக்கிறது. தற்போது, 31 லட்சத்து 57 ஆயிரம் விவசாயிகள் கடனில் இருக்கின்றனர். வரும்காலத்தில் அவர்களுக்கு பயிர்க்கடன் அளிக்கப்பட்டால், அதனை அவர்கள் திருப்ப செலுத்த வேண்டியது அவசியமாகிறது. தற்போது அவர்களின் கடன் தொகை ரூ.30 ஆயிரத்து 500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண்துறையில் முதலீட்டை மாநில அரசு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கடன் வலையில் இருந்து மீள்வார்கள். விவசாய கடனை தள்ளுபடி செய்தால், அது விவசாயத்துறையின் முதலீட்டை பாதிக்கும்.

இவ்வாறு சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்