தொடர்ந்து கைவரிசை: மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது

புதுச்சேரியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடிய கைவரிசை காட்டிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-03-18 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து போலீசுக்கு அடுத்தடுத்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் உத்தரவிட்டார்.

இதன்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் புவன்கரே வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்கள் மீது போலீசுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்களை கேட்டபோது அது திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

உரிய முறையில் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்வரன் (22), மஞ்சக்குப்பம் மோகன் என்ற ஆல்பர்ட் (20), தாழங்குடா அசோக் (19) என்பதும் புதுவை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிள்களை இவர்கள் திருடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஏற்கனவே பல இடங்களில் திருடி வைத்து இருந்த மேலும் 5 மோட்டார் சைக்கிள்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்