1½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் 1½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-18 22:15 GMT
நன்னிலம்,

நன்னிலம் வட்டம் கீரனூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் சக்திவேல் பார்வையிட்டு, கால்நடை வளர்ப்போர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை, எளிய மக்கள் குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கால்நடைகளை கோமாரி நோய் தாக்குதில் இருந்து முழுமையாக பாதுகாத்து அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்திட தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் ஆண்டுதோறும் மார்ச் 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை நடத்திட ஆணையிட்டுள்ளது.

அறிவுறுத்தல்

மேலும் இத்தகைய முகாம் நாட்களில் கால்நடை வளர்ப்போர் முகாமினை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும். ஏதாவது காரணங்களினால் கால்நடைகளுக்கு முகாம் நாட்களில் தடுப்பூசி போட தவறினால் கால்நடைத்துறை மருத்துவர்கள் வருகிற 22-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கால்நடை வளர்ப்போர் இருப்பிடம் சென்று தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 1½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முகாமில் திருவாரூர் மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், துணை இயக்குனர் டாக்டர் முகமதுஉதுமான், உதவி இயக்குனர் ஈஸ்வரன், கால்நடை உதவி மருத்துவர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்