தெருநாய்கள் துரத்தியதில் புள்ளிமான் காயம்; வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

தெருநாய்கள் துரத்தியதில் புள்ளிமான் காயம்; பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

Update: 2017-03-18 22:45 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர், பாண்டகப்பாடி, கை.களத்தூர் பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. இதில் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வறட்சியால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் மான்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், கிராமப்புற பகுதிகளுக்கும் தண்ணீரை தேடி வருகின்றன. இந்நிலையில் நேற்று பாண்டகப்பாடி வனப்பகுதியில் இருந்து 1 வயது புள்ளிமான் தண்ணீர் தேடி நெய்குப்பை பகுதிக்கு வந்தது. அப்போது தெருநாய்கள் அந்த மானை துரத்தியதால் பயந்து ஓடிய மான் நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் புகுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் மானை துரத்தி வந்த நாய்களை விரட்டிவிட்டு மானை பிடித்தனர். அப்போது மானின் காலில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனக்காப்பாளர் பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் மானை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மான் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளித்து பாண்டகப்பாடி வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். 

மேலும் செய்திகள்