கோட்டியால் கிராமத்தில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 பேர் காயம்

கோட்டியால் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-03-18 23:00 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கோட்டியால் கிராமம் வயல்வெளியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அவனியாபுரம், திருச்சி, மணப்பாறை, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

9 பேர் காயம்

காளைகள் முட்டியதில் ஆதித்தனூரை சேர்ந்த பெருமாள் மகன் செல்வமணி (வயது 25), கோடங்குடி தங்கவேல் (65), காரைகுறிச்சியை சேர்ந்த குளஞ்சி மணி (38), தாசங்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (30), அருள்மொழி முருகன் (25) உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர் களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கு விழா குழுவினரால் செல்போன், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, மின்விசிறி, ரூ.5 ஆயிரம் வரையிலான பணமுடிப்பு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டியால், சுத்தமல்லி, வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்கள் மற்றும் கோட்டியால் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு உரிய அனுமதி இல்லாததால், மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அதிகாரிகள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. 

மேலும் செய்திகள்