சாலையின் நடுவே பந்தல் அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையின் நடுவே பந்தல் அமைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

Update: 2017-03-18 23:00 GMT
வெள்ளியணை,

கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியம் பாகநத்தம், கே.பிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் நிலங்களை வாங்கி காற்றாலை அமைத்து மின் உற்பத்தியை தொடங்க பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் காற்றாலை அமைப்பதால் தங்களுடைய வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படும் என முறையிட்டனர். இதனையடுத்து காற்றாலை மின்உற்பத்தி நிறுவனத்தினருக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை மாவட்ட நிர்வாகம் நடத்தியது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்

அதன்படி தொடங்கப்பட்ட பணிகளை மட்டும் முடிக்க காற்றாலை நிர்வாகம் வேலைகளை தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து காற்றாலை அமைக்கும் இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மறிப்பதற்காக திடீரென்று பாகநத்தம் ஊராட்சி முஸ்டகிணத்துப்பட்டியில் இருந்து புதுப்பட்டி செல்லும் மண் சாலையின் நடுவே பந்தல் அமைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி, தாசில்தார் துரைசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்