முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2017-03-18 23:00 GMT
கும்பகோணம்,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வி பயின்று வந்த சேலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணத்தில் தமிழ்நாடு குடியரசு கட்சி, எளிய மக்கள் நல இயக்கம், மக்கள் ஜனநாயக ஒடுக்கப்பட்ட சாதிகள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு குடியரசு கட்சி மற்றும் எளிய மக்கள் நல இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு குடியரசு கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர்கள் வேலப்பன், முகமதுபாரூக், நகர அமைப்பாளர் ராஜசேகர், வார்டு செயலாளர் பிரவீன், எளிய மக்கள் நல இயக்க நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதி விசாரணை

ஆர்ப்பாட்டத்தில் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சாதிய வன்முறைகளுக்கு காரணமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு குடியரசு கட்சியின் நிறுவன தலைவர் எழிலன், எளிய மக்கள் நல இயக்க அமைப்பாளர் ஜான்சன், தமிழ் தேசிய பாதுகாப்பு கழக மாநில இளைஞர் அணி செயலாளர் கரிகாலன், தமிழ்நாடு குடியரசு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாதவன் நன்றி கூறினார்.

அதேபோல் மக்கள் ஜனநாயக ஒடுக்கப்பட்ட சாதிகள் முன்னணி சார்பில் கும்பகோணம் பக்தபுரி ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னணியின் நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் ராஜ்குமார், காமராஜ், ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நீதி விசாரணை நடத்தி முத்துகிருஷ்ணனின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

மேலும் செய்திகள்