பெங்களூருவில் பயங்கரம் ஒடிசா வாலிபரின் நாக்கு துண்டிப்பு; மர்ம உறுப்பிலும் கொடூர தாக்குதல்

பெங்களூருவில், ஒடிசா வாலிபரின் நாக்கை அறுத்து துண்டித்ததுடன், அவரது மர்ம உறுப்பிலும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-03-18 20:42 GMT

பெங்களூரு,

பெங்களூருவில், ஒடிசா வாலிபரின் நாக்கை அறுத்து துண்டித்ததுடன், அவரது மர்ம உறுப்பிலும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது. முகமூடி அணிந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

வாலிபரின் நாக்கு துண்டிப்பு

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிஜூநாயக் (வயது 21). இவர், பெங்களூருவில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஒயிட்பீல்டு அருகே இம்மடிஹள்ளியில் வாடகை வீட்டில் பிஜூநாயக் வசித்து வருகிறார். கடந்த 17–ந் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு அவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் பிஜூநாயக் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில், நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக தூங்கி கொண்டிருந்த அவர் வீட்டில் இருந்து வெளியே வந்ததாக தெரிகிறது.

அப்போது முகமூடி அணிந்து கொண்டு வந்த 4 பேர், பிஜூநாயக்கை அங்கிருந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மர்மநபர்கள், பிஜூநாயக்கின் நாக்கை கத்தியால் அறுத்து துண்டித்ததாகவும், அவரது மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கியதாகவும் தெரிகிறது. அதன்பிறகு, அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.

4 பேருக்கு வலைவீச்சு

இந்த நிலையில், வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பிஜூநாயக் நாக்கு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் அவரை மீட்டு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் பிஜூநாயக் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்ததும் ஒயிட்பீல்டு போலீசார் நேற்று காலையில் தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆனால் பிஜூநாயக்கின் நாக்கை அறுத்து துண்டித்ததால் அவரால் பேச முடியாத நிலையில் உள்ளார். இதனால் அவரிடம் எந்த விசாரணையும் நடத்த முடியவில்லை. இருப்பினும் முகமூடி அணிந்து வந்த 4 மர்மநபர்கள் தூக்கிச் சென்று நாக்கை அறுத்ததுடன், மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மர்மநபர்கள் எதற்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்