ஒரே குடும்பத்தினர் உள்பட 14 பேர் பரிதாப சாவு டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி, 2 ஆட்டோக்கள்–சொகுசு வேன் மீது மோதியது

சித்ரதுர்காவில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி, 2 ஆட்டோக்கள், சொகுசு வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக செத்தனர்.;

Update: 2017-03-18 21:30 GMT

மங்களூரு,

சித்ரதுர்காவில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி, 2 ஆட்டோக்கள், சொகுசு வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக செத்தனர்.

லாரி டயர் வெடித்தது

கர்நாடக மாநிலம் பல்லாரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி நேற்று காலை 11 மணி அளவில் சித்ரதுர்கா வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகா ராமபுரா பகுதியில் வந்தபோது திடீரென்று அதன் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி அந்த வழியாக வந்த 2 ஆட்டோக்கள் மீது மோதியது.

மேலும் அதே சாலையில் வந்த சொகுசு வேன் மீதும் மோதிவிட்டு லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 ஆட்டோக்கள் சுக்குநூறாக நொறுங்கின. மேலும் சொகுசு வேனும் பலத்த சேதமடைந்தது.

14 பேர் சாவு

இந்த விபத்தில் ஆட்டோக்களில் பயணம் செய்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 ஆட்டோ டிரைவர்களும், அவற்றில் பயணம் செய்த 9 பேரும் என 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராமபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் காயமடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக பல்லாரி விம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

ஒரே குடும்பத்தினர்...

போலீஸ் விசாரணையில், விபத்தில் சிக்கிய 2 ஆட்டோக்களும் மொலகால்மூரு தாலுகா உடையரபாளையாவில் இருந்து ராமபுரா நோக்கி சென்றது தெரியவந்தது. மேலும் விபத்தில் சிக்கிய சொகுசு வேன் பெங்களூருவில் இருந்து யாதகிரி நோக்கி சென்றதும் தெரியவந்தது. அத்துடன் விபத்தில் பலியானவர்களில் 7 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளது.

அதாவது, பல்லாரி மாவட்டம் கூட்லகி தாலுகா ஆரப்பனஹள்ளியை சேர்ந்த ஒன்னூரப்பா(வயது 40), துர்கம்மா(35), சிந்தாமணி(12), வைஷாலி(7), ஆட்டோ டிரைவர் பசவராஜ்(34), சகாபுரா அருகே பேபினஹள்ளியை சேர்ந்த சிவராஜ்(7), லிங்கப்பா ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களில் ஒன்னூரப்பா–துர்கம்மா கணவன், மனைவி என்பதும், இந்த தம்பதியின் மகள்கள் சிந்தாமணி, வைஷாலி என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. பலியானவர்களில் மேலும் 7 பேரின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி ராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மந்திரிகள் ஆறுதல்

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மந்திரிகள் சந்தோஷ் லாட், எச்.கே.பட்டீல் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

விபத்தில், ஒரே குடும்பத்தினர் உள்பட 14 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்