அதிக வாடகை காரணமாக திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பூட்டி கிடக்கும் கடைகள்

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 16 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான ஒப்பந்தம் 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் 31–ந் தேதியுடன் முடிவடைந்தது.

Update: 2017-03-18 20:03 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 16 கடைகள் உள்ளன.  இந்த கடைகளுக்கான ஒப்பந்தம் 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் 31–ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த கடைகளுக்கான ஏலம் விடப்பட்டது. அதில் நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த தொகையை விட ஏலத்தொகை குறைவாக இருந்ததால் அதன் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அங்கு கடை வைத்து நடத்தியவர்கள் அதிக வாடகையை கொடுக்க முடியாமல் தங்களது கடையை பூட்டி நகராட்சி நிர்வாகத்திடம் சாவியை ஒப்படைத்தனர்.

தற்போது திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மொத்தம் உள்ள 16 கடைகளில் 2 கடைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 14 கடைக்காரர்கள் கடையை பூட்டி சாவியை ஒப்படைத்து விட்டனர். தற்போது பூட்டி உள்ள கடைகளின் முன்பு பூக்கள், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை வைத்து சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த 14 கடைகளும் பூட்டப்பட்டுள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சியினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மூடப்பட்ட கடைகளை திறக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்