பச்சை தேயிலைக்கு மாத விலையாக கிலோவுக்கு ரூ.17 நிர்ணயம்
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு மாத விலையாக கிலோவுக்கு ரூ.17 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.;
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் பச்சை தேயிலையை வினியோகம் செய்து வருகிறார்கள். இதில் தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலைக்கு வார விலையும், கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலை தவிர மற்ற தொழிற்சாலைகளில் மாத விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கூட்டுறவு தொழிற்சாலைகளில் குன்னூர் இன்கோசர்வ் நிர்வாகம் விலை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வினியோகம் செய்த பச்சை தேயிலைக்கு மாத விலையாக கிலோவுக்கு ரூ.17 நிர்ணயம் செய்துள்ளது.
கூடுதல் விலைஇதன்படி சாலீஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை ஒரு கிலோவுக்கு 17 ரூபாய் 50 காசு, கூடுதல் விலை ரூ.3 சேர்த்து மொத்தம் 20 ரூபாய் 50 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஞ்சூர், கைக்காட்டி, குந்தா (எடக்காடு) ஆகிய கூட்டுறவு தொழிற்சாலைகளில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.17 மற்றும் கூடுதல் விலை ரூ.2 சேர்த்து மொத்தம் ரூ.19 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்கட்டி கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை ஒரு கிலோவுக்கு ரூ.17, கூடுதல் விலை ரூ.1 சேர்த்து மொத்தம் ரூ.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்தலூர் கூட்டுறவு தொழிற்சாலையில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு 17 ரூபாய் 50 காசு, கூடுதல் விலை ரூ.1 சேர்த்து மொத்தம் 18 ரூபாய் 50 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அதிருப்திமேற்குநாடு, மகாலிங்கா, இத்தலார், கிண்ணக்கொரை, கரும்பாலம் ஆகிய கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை ஒரு கிலோவுக்கு ரூ.17, கூடுதல் விலையாக 50 காசு என சேர்த்து மொத்தம் 17 ரூபாய் 50 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எப்பநாடு, பிதிர்காடு, பிராண்டியார் ஆகிய கூட்டுறவு தொழிற்சாலைகளில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.17 ரூபாய் என மாதவிலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இன்கோசர்வ் நிர்வாகத்தின் கீழ் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் மாறுபட்ட விலை வழங்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.