ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் கூடுதல் கலெக்டர் அலுவலகம் திறப்பு
ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் ரூ.27 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகம் திறப்பு
ஊட்டி
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரூ.27 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
கூடுதல் கலெக்டர் அலுவலகம் மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. மாவட்ட தலைநகரான ஊட்டியில் பல்வேறு அரசு துறைகளின் தலைமை அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் பெரும்பாலும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதோடு, இந்த அலுவலகங்களை பொதுமக்கள் தேடி அலையும் நிலை உள்ளது. மேலும் சில அலுவலகங்கள் மிகவும் செங்குத்தான பகுதியில் அமைந்து உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இதனை தொடர்ந்து ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரூ.27 கோடி செலவில் கூடுதல் கலெக்டர் அலுவலகம் அமைக்க அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். இதன்படி புதிய கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது.
புதிய கட்டிடங்கள்இந்த பணி தற்போது நிறைவடைந்ததை முன்னிட்டு கோவையில் இருந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்னர் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சங்கர் குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஸ்ரீவஸ்தவா, மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் சங்கர் கூறியதாவது:– நீலகிரி மாவட்டத்தில் ரூ.67 கோடியே 98 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள 229 புதிய கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை தமிழக முதல்–அமைச்சர் திறந்து வைத்து உள்ளார்.
பழங்குடியினர் பண்பாட்டு மையம்இதில் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் திறக்கப்பட்டு உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் 28 அரசு துறைகள் இயங்கும். எனவே பொதுமக்கள் அரசு துறை அலுவலகங்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது. அனைத்து அரசு துறைகளும் ஒரே இடத்தில் இருப்பதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். விரைவில் 28 அரசு துறை அலுவலகங்கள் இங்கு இயங்க தொடங்கும். இந்த அலுவலகங்கள் அருகே ரூ.6 கோடி செலவில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட்டு உள்ளது.
இதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் கட்டப்பட்டு உள்ளது. இதில் நீலகிரியில் உள்ள கோத்தர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், இருளர் உள்ளிட்ட ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறை குறித்த ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளது. இங்குள்ள அரங்கில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கண்டு ரசிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.
பசுமை வீடுகள்இனிவருங்காலங்களில் கோடை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இந்த அரங்கத்தில் நடைபெறும். மேலும் கோத்தர், தோடர், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நீலகிரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 155 பசுமை வீடுகள், துப்புரவு பணியாளர்கள் குடியிருப்புகள், மாணவர் விடுதிகள், ஊட்டி காந்தலில் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் உள்ளிட்டவையும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.