தேனி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கு விருது மாவட்ட கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-18 22:30 GMT

தேனி

தமிழ்நாட்டில் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002–2003–ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் சிறந்த 5 பேருக்கு விருது வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, 2002–2003–ம் ஆண்டு முதல் 2009–2010–ம் ஆண்டு வரை 40 கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2010–2011–ம் நிதியாண்டில் இருந்து 2015–2016–ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கான விருதுகள் தேனி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக வழங்கப்பட உள்ளது.

தேர்வுக்குழு

இயல், இசை, நாடகம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மணி விருது, 36 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு கலைச்சுடர் மணி விருது.

51 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கலை நன்மணி விருது, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள்

பாட்டு, பரதநாட்டியம், கும்மி, தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, கூத்து, ஓவியம், சிற்பம், அரசன்–அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன்–குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகையான முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேசிய விருதுகள், மாநில கலை விருதுகள், மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கக்கூடாது.

விருதுபெற விரும்பும் தகுதியுள்ள கலைஞர்கள் தங்களின் விண்ணப்பத்துடன், வயது சான்று, முகவரி சான்று, கலை அனுபவச்சான்று ஆகியவற்றை இணைத்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 15–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ‘உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு இயக்கம், பாரதி உலா சாலை முதல்தெரு, தள்ளாகுளம், மதுரை’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடாசலம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்