நெற்பயிருக்கு வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், நெற்பயிருக்கு வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2017-03-18 22:45 GMT

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பது லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை ஆகும். முல்லைப்பெரியாறு மூலம் இந்த பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் இருபோக நெல் விவசாயம் முழுமை அடையவில்லை. பச்சைப்பசேலென என்று காட்சியளிக்கும் வயல்கள் வறண்டு போனது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இருபோக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் மட்டும் அல்லாமல் விவசாய கூலித்தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். இதையடுத்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நிவாரணம்

இதற்கிடையே தமிழக அரசு வறட்சி பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களுக்கு மட்டும் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நெற்பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் நீரினைப்பயன்படுத்துவோர் சங்க கூட்டம் உத்தமபாளையத்தில் நடந்தது. இதற்கு தலைவர் தர்வேஷ்மைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் சகுபர்அலி, துணைத்தலைவர் விஜயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டம் நடத்த முடிவு

கூட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இதுவரை இல்லாத வகையில் இருபோக நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே விவசாய கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டும் நிவாரண தொகை இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் முதல் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை உத்தமபாளையம் தாசில்தாரிடம் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்