தூத்துக்குடி மாவட்டத்தில் 53 பாசன குளங்களை குடிமராமத்து பணி மூலம் தூர்வார வேண்டும் மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் அறிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பாசனத்தில் உள்ள 53 குளங்களையும் குடிமராமத்து பணி மூலம் தூர்வார வேண்டும் என்று ஜோயல் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-03-18 19:09 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பாசனத்தில் உள்ள 53 குளங்களையும் குடிமராமத்து பணி மூலம் தூர்வார வேண்டும் என்று மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தாமிரபரணி ஆறு

தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் தாமிரபரணி ஆற்று பாசனத்தை நம்பி உள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக தாமிரபரணி பாசனத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் முக்கிய நீராதாரமான தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சுமார் 10 முதல் 15 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

குடிமராமத்து பணி

இதனால் தாமிரபரணி ஆற்று பாசனத்தில் உள்ள 53 பாசன குளங்களையும், நீர்வரத்து கால்வாய்களையும் குடிமராமத்து பணி மூலம் தூர்வார வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, அனைத்து நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். குடிமராமத்து பணிகளை தாமதம் இன்றி தொடங்க வேண்டும்.

இவ்வாறு மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்