எட்டயபுரம் அருகே தண்ணீரை தேடி திரிந்த மான் குட்டி, மேய்ச்சல் ஆடுகளுடன் வீட்டுக்கு வந்தது வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 மாத மான்குட்டி ஒன்று, மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஆடுகளுடன் ஒரு பெண்ணின் வீட்டுக்கு வந்தது.;

Update: 2017-03-18 21:00 GMT

கோவில்பட்டி,

தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 மாத மான்குட்டி ஒன்று, மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஆடுகளுடன் ஒரு பெண்ணின் வீட்டுக்கு வந்தது. அந்த மான்குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

புள்ளிமான் குட்டி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டப்பன். அவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலையில் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். மாலையில் ஆடுகள் அவரது வீட்டுக்கு திரும்பி வந்தன.

ஆடுகளின் இடையில் பச்சிளம் புள்ளிமான் குட்டி ஒன்றும் வந்தது. இதைப்பார்த்து பாண்டியம்மாள் அதிசயித்தார். அந்த புள்ளிமான் குட்டியை பத்திரமாக வீட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் இதுகுறித்து மாசார்பட்டி போலீசாருக்கும், விளாத்திகுளம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசம்பந்தம், சப்–இன்ஸ்பெக்டர் தர்மராஜ், வனத்துறை அலுவலர் லோகசுந்தரம் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். பாண்டியம்மாளிடம் இருந்த புள்ளிமான் குட்டியை வாங்கினர். அது பிறந்து 4 மாதங்களே ஆகி இருந்த ஆண் புள்ளிமான் குட்டி என தெரியவந்தது. பின்னர் அதனை விளாத்திகுளம் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.

தண்ணீரை தேடி...

வைப்பாற்று படுகைகள், கண்மாய்களில் ஏராளமான புள்ளி மான்கள் சுற்றித்திரிகின்றன. தற்போது கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீரைத் தேடி புள்ளிமான்கள் அலைகின்றன. அவ்வாறு தண்ணீர் தேடி வந்த போது, இந்த 4 மாத மான் குட்டி வழி தவறி இருக்கலாம் எனவும், மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஆடுகளுடன் இணைந்து அந்த மான் குட்டி வீடு வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, “புள்ளிமான் குட்டியை விளாத்திகுளம் வனத்துறை அலுவலகத்தில் 2 மாதங்கள் பராமரித்து வளர்த்து, அதன் பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடுவோம்“ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்