ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு: டிரைவர்கள்–கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில், ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக அரசு பஸ்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2017-03-18 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 1–ந்தேதி வழங்கப்பட்டு வந்த பென்சன் கடந்த சில மாதங்களாக தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்து ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஓய்வூதியமும் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை உடனே வழங்க வலியுறுத்தியும் குமரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் கடந்த 16–ந்தேதி தொடங்கியது.

போராட்டத்தை, சங்க துணைத்தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இரவு, பகலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ளவர்களுக்கு தேவையான உணவை, அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் அவர்களே சமைத்து உண்ணுகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இதைத்தொடர்ந்து இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. இதில் ஓய்வூதியர்கள் தங்களது குடும்பத்தாருடன் கலந்துகொண்டனர். இந்த நிலையில் ஓய்வூதியர்களின் போராட்டத்துக்கு அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையொட்டி டிரைவர்களும், கண்டக்டர்களும் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று காலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான டிரைவர்களும், கண்டக்டர்களும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் டிரைவர்களும், கண்டக்டர்களும் பணிக்கு செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே வேலைக்கு சென்றனர்.

பயணிகள் அவதி

இதன் காரணமாக ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை புறப்படும் ஒரு சில அரசு பஸ்கள் 6 மணிக்கு பிறகு புறப்பட்டு சென்றது. இதனால் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்து பயணிகள் அவதியடைந்தனர்.

மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் டிரைவர்களும், கண்டக்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க பணிமனை தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். ஜான்ராஜன், ஸ்ரேல், பகவதியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல செட்டிகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்