சாலை பணிக்காக ஜல்லி இறக்கிய போது மின்கம்பி மீது லாரி உரசி தீப்பிடித்தது; டிரைவர் உடல் கருகினார்

ஆரல்வாய்மொழி அருகே சாலை சீரமைப்பு பணிக்காக ஜல்லி இறக்கிய போது மின்கம்பி மீது லாரி உரசி தீப்பிடித்தது. இதில் டிரைவர் உடல் கருகினார். அவரை காப்பாற்ற சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

Update: 2017-03-18 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணைக்கு மரப்பாலத்தில் இருந்து ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை சீரமைப்பு பணி தற்போது நடந்து வருகிறது.

இந்தநிலையில், நேற்று சாலை பணிக்கு தேவையான ஜல்லிகளை ஒரு டிப்பர் லாரி கொண்டு சென்றது. அந்த லாரியை புதுக்கோட்டை மாவட்டம் ஆவடையார்கோவிலை சேர்ந்த சந்திரன் (வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். சாலைபணி நடைபெற்று கொண்டிருந்த  இடத்தை சென்றடைந்ததும், லாரியை நிறுத்திவிட்டு அதில் இருந்த ஜல்லியை இறக்குவதற்காக டிரைவர் வண்டியின் பின்பகுதியை உயர்த்தினார்.

மின்சாரம் பாய்ந்தது

அப்போது, லாரியில் உயர்த்தப்பட்ட பாகத்தின் மேல்முனை அந்த வழியாக சென்ற உயர்அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து லாரி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அத்துடன் லாரியின் இருந்த டிரைவர் சந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்து தீ எரிந்தது. இதை பார்த்த சகதொழிலாளி அய்யப்பன் (22) விரைவாக செயல்பட்டு, கம்பு மற்றும் கையில் கிடைந்த பொருட்கள் மூலம் சந்திரனை லாரியில் இருந்து கீழே இழுத்து தள்ளினார். அப்போது, அய்யப்பன் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

தொடர்ந்து, அருகில் நின்றவர்கள் ஓடி வந்து, சந்திரன் மீது எரிந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினர். இதில் சந்திரனின் இடுப்பு பகுதி முழுவதும் கருகியது. தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தீயை அணைத்தனர்

மேலும், இந்த விபத்து குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய வீரர்கள் விரைந்து சென்று லாரி மீது எரிந்த தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்