பெண் குழந்தை கொலையில் தாய் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
உத்தனப்பள்ளி அருகே பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை,
கள்ளக்காதல்உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் கெம்பையா (வயது 35). விவசாயி. இவரது மனைவி ராதா (24). இவர்களுக்கு மகேந்திரன் (4) என்ற மகனும், மதுஸ்ரீ என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் ஓசூரை அடுத்த மாயநாயக்கனப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (37) என்பவருக்கும், ராதாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவரை பிரிந்து தனது குழந்தை மதுஸ்ரீயுடன் கள்ளக்காதலனுடன் சென்ற ராதா 15 நாட்களுக்கு பிறகு கெம்பையாவின் வீட்டிற்கு வந்தார். பின்னர் மீண்டும் கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றார். இந்த நிலையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கடந்த 16–ந் தேதி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கெம்பையா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர்.
தாய் கைதுஇந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மதுஸ்ரீ கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தது. இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் ராதாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நான் எனது குழந்தையை ஜாக்கெட் மூலமாக கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ராதாவை போலீசார் கைது செய்து ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.