மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் சேலத்தில் திருநாவுக்கரசர் பேட்டி

மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்

Update: 2017-03-18 23:30 GMT

சேலம்,

பெற்றோருக்கு ஆறுதல்

டெல்லியில் உள்ள ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் சேலம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று மதியம் சேலம் வந்து முத்துகிருஷ்ணனின் பெற்றோர் மற்றும் அவருடைய சகோதரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர், முத்துகிருஷ்ணனின் பெற்றோரிடம் நிவாரண உதவியாக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சி.பி.ஐ. விசாரணை

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் டெல்லியில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் திடீரென சந்தேகம் அளிக்கும் வகையில் மரணம் அடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்றும், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவருடைய பெற்றோர் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு சட்டம்

முத்துகிருஷ்ணனின் சகோதரி ஒருவருக்காவது அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கி உள்ளோம். அரசு வழங்கிய ரூ.3 லட்சம் நிவாரண உதவி அவருடைய குடும்பத்துக்கு போதாது. எனவே ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

வடமாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் தேர்தலின் போது இந்துத்துவா சக்திகள், அமைப்புகள் கல்லூரி நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். டெல்லியில் போலீஸ் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தலித்துகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை காங்கிரஸ் ஆதரிக்கும்.

கண்டனத்துக்குரியது

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியது கண்டனத்துக்குரியது. இதை யாரும் ஆதரிக்க கூடாது. மேலும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் தி.மு.க.விற்கு ஆதரவாக காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, முன்னாள் எம்.பி., தேவதாஸ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் மோகன் குமாரமங்கலம், மாவட்ட தலைவர்கள் மேகநாதன், முருகன், பெரியசாமி மற்றும் நிர்வாகிகள், பூபதி, அர்த்தனாரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்