சேலத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு பெண் உள்பட 5 பேர் கைது
சேலத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
தாரமங்கலம்,
கண்காணிப்புசேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள பால்பண்ணை பகுதியை சேர்ந்த ஒரு கும்பலிடம் மரகதலிங்கம் ஒன்று இருப்பதாகவும், இந்த மரகதலிங்கத்தை அந்த கும்பல் சேலம், கோவை வழியாக வெளிநாட்டிற்கு கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்வதாகவும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் அதிகாரிகள் சேலம் வந்து இரும்பாலை அருகே உள்ள பால்பண்ணை பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று காலை பால்பண்ணை பகுதியில் சந்தேகம் அடையும் வகையில் பெண் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சொகுசு காருடன் நின்று கொண்டிருந்தது.
மரகதலிங்கம்இதைப் பார்த்ததும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே அதிகாரிகளை பார்த்ததும் அந்த கும்பல் காரில் ஏறி வேகமாக சென்றது. இதையடுத்து இந்த காரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரட்டி சென்றனர். தாரமங்கலம் போலீஸ் எல்லைக்குட்பட்ட அழகுசமுத்திரம் பகுதியில் சென்றபோது அந்த சொகுசு காரை அதிகாரிகள் மறித்தனர்.
இதையடுத்து காரில் இருந்த பெண் உள்பட 5 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் மரகதலிங்கம் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து பெண் உள்பட 5 பேரையும் அதிகாரிகள் தாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
வெளிநாட்டிற்கு கடத்த முயற்சிபோலீஸ் நிலையத்தில் அந்த கும்பலிடம் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் இரும்பாலை அருகே உள்ள பால்பண்ணை பெருமாள் கோவில் அடிவாரம் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற சாமுவேல் என்பவருடைய மனைவி வள்ளி என்கிற மேரி(வயது 49), பழனிசாமி மகன் சீனிவாசன்(32), ஆறுமுகம் மகன் மாரியப்பன்(47), கோபால் மகன் குமரேசன்(28), ராஜேந்திரன் மகன் சரவணன்(27) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அந்த கும்பல் மரகதலிங்கத்தை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் இருந்து கடத்தி கொண்டு வந்ததும், இந்த மரகதலிங்கத்தை அவர்கள் சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் மூலம் வெளிநாட்டிற்கு கடத்தி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
ரூ.25 கோடி மதிப்புகடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட மரகதலிங்கம் சுமார் அரை அடி உயரம் கொண்டது. இதன் எடை 7 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.25 கோடி என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மரகதலிங்கத்தை கடத்த முயன்ற மேரி, சீனிவாசன், மாரியப்பன், குமரேசன், சரவணன் ஆகிய 5 பேரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த சிலை எப்போது கடத்தப்பட்டது?, யாருக்காக கடத்தப்பட்டது?, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் மொத்தம் எத்தனை பேர்? என்பது குறித்து கைதானவர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட மரகதலிங்கத்தை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அந்த மரகதலிங்கத்தை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு சென்னை கொண்டு சென்றனர்.