திருவண்ணாமலையில் அரசு போக்குவரத்து பணிமனைகள் முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-18 21:30 GMT

திருவண்ணாமலை,

ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அனைத்து போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக நேற்று அதிகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திருவண்ணாமலை தேனிமலை–2 அரசு போக்குவரத்து பணிமனையின் முன்பு அதிகாலை 5.30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய மானியம் வழங்க வேண்டும், நஷ்டத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும், 2003–ம் ஆண்டுக்கு பின்னர் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

பஸ்கள் தாமதம்

இதில் போக்குவரத்து கழகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக பணிமனையில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை எந்த பஸ்களும் புறப்படவில்லை. இதனால் அதிகாலை நேரத்தில் பஸ் நிலையங்களுக்கு வரவேண்டிய பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் சிறிது நேரம் தாமதமாக வந்தன.

மேலும் செய்திகள்