வாணியம்பாடி அருகே தலையில் பாறாங்கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை

வாணியம்பாடி அருகே தலையில் பாறாங்கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-03-18 21:00 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே தலையில் பாறாங்கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தலையில் பாறாங்கல் போட்டு கொலை

வாணியம்பாடியை அடுத்த சின்னமோட்டூர் நாட்டார்வட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 24), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலையில் சின்னமோட்டூர் அருகே ஒரு பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தார். இவரது தலையின் மீது பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

எருது விடும் விழா

போலீசார் நடத்திய விசாரணையில், கோவிந்தராஜ் தான் வளர்க்கும் மாட்டை எருது விடும் விழாவுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த எருது விடும் விழா இவரது காளை ரூ.15 ஆயிரம் பரிசை வென்றது.

பரிசுத்தொகையில் ரூ.10 ஆயிரத்தை தனது வீட்டில் கொடுத்துவிட்டு மீதி பணத்தை வைத்துக்கொண்டு பொன்னேரியில் நண்பர்களுடன் கோவிந்தராஜ் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவர் வீடு திரும்பி வந்துள்ளார். வழியில் உள்ள பாலத்தில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது நண்பர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்