வேலூர்– விழுப்புரம் இடையே புதிய பயணிகள் ரெயில் இயக்கம்

வேலூர்– விழுப்புரம் இடையே புதிய பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் வரவேற்றனர்.

Update: 2017-03-18 21:30 GMT

வேலூர்,

வேலூர்– விழுப்புரம் இடையே புதிய பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் வரவேற்றனர்.

புதிய பயணிகள் ரெயில்

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்று. இந்த ரெயில் நிலையம் வழியாக சென்னை, பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு தினமும் அதிகளவில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் வேலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய ரெயில் வசதி கிடையாது. காட்பாடியில் இருந்து விழுப்புரத்துக்கு குறிப்பிட்ட சில ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் கன்டோன்மென்ட் – விழுப்புரம் இடையே புதிதாக ரெயில் இயக்க திட்டமிடப்பட்டது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படும் என்றும், பகல் 11–30 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது. முன்னதாக இதே ரெயில் காலை 7–15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காலை 10–30 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில்நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வரவேற்பு

அதன்படி இந்த புதிய ரெயில் நேற்று இயக்கப்பட்டது. காலை 7–30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் 10–30 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் வியாபாரிகள், ரெயிலை ஓட்டி வந்த ரெயில் டிரைவருக்கு மாலை அணிவித்தனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில் நிலைய அலுவலர் சைலேந்திரகுமார் கூறியதாவது:–

வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து இயக்கப்படும் இந்த ரெயில் விழுப்புரம் வரை செல்லும். இன்று முதல் (அதாவது நேற்று) வருகிற 31–ந் தேதி வரை சோதனை ஓட்டமாக இயக்கப்படும். மக்களின் ஆதரவை அடுத்து நிரந்தரமாக இயக்கப்படும்.

டிக்கெட் விலை

வேலூர் கன்டோன்மென்டில் இருந்து விழுப்புரம் வரை டிக்கெட் விலை வருமாறு:–

கணியம்பாடி ரூ.30, கண்ணமங்கலம் ரூ.30, ஆரணி ரோடு ரூ.30, போளூர் ரூ.35, அகரம்சிப்பந்தி ரூ.40, துரிஞ்சாபுரம் ரூ.45, திருவண்ணாமலை ரூ.45, தண்டரை ரூ.50, திருக்கோவிலூர் ரூ.55, மாம்பழப்பட்டு ரூ.60, வெங்கடேசபுரம் ரூ.60 விழுப்புரம் ரூ.65.

இந்த ரெயில் வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போளூரை சேர்ந்த காமராஜ் கூட்டுறவு வங்கி ஊழியர் பாரதிரத்தினம் தனது மகன் ஜார்ஜ்ஜெபர்சனுடன் இந்த ரெயிலில் போளூரில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு பயணம் செய்தார். இந்த ரெயில் சேவை குறித்து அவர் கூறியதாவது:–

புதிய ரெயில் இயக்கப்படுவதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். எனது மகனுக்கு ரெயில் பயணம் குறித்த அனுபவத்தை கற்றுக்கொடுக்க போளூர் ரெயில் நிலையத்துக்கு வந்த இந்த ரெயிலில் ஏறி வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு வந்தோம். இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் செல்ல வேண்டும் என்றால் இந்த ரெயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிரந்தரமாக இயக்க கோரிக்கை

குறிப்பாக பணியின் நிமித்தமாக செல்பவர்களுக்கும், பவுர்ணமி மற்றும் பிற விசே‌ஷ நாட்களில் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கும் இந்த ரெயில் பயன் உள்ளதாக அமையும். இந்த ரெயில் சேவை குறித்து பொதுமக்கள் முழுமையாக தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும். அதன்பின்பு இந்த ரெயிலை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். இந்த ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்