பந்தயத்தில் உருவான பந்தம்!– ராக் சொல்கிறார்

‘இதுவரை பார்த்த திரைக்கதையை விட மிரட்டலாக வருகிறோம். சாலைகளில் சீறி பாய்ந்தது பழைய கதை. பனிப்பிரதேசங் களிலும், ஆழ்கடலில் சீறிப்பாய இருப்பது தான் புதுக்கதை.

Update: 2017-03-18 10:52 GMT
‘இதுவரை பார்த்த திரைக்கதையை விட மிரட்டலாக வருகிறோம். சாலைகளில் சீறி பாய்ந்தது பழைய கதை. பனிப்பிரதேசங் களிலும், ஆழ்கடலில் சீறிப்பாய இருப்பது தான் புதுக்கதை. நீங்கள் கொஞ்சம் ஏமாந்தால் வானத்திலும் சீறி பாய்ந்துவிடுவோம்’ என மிரட்டலாக பேச ஆரம்பிக்கிறார், ‘லூக் ஹாப்ஸ்’ என்கிற ‘டிவைன் ராக்’. ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படத்தில் ராக் நடித்திருக்கும் ‘ஹாப்ஸ்’ கதாபாத்திரம், அவர் முன்னாள் மல்யுத்த வீரர் என்பதை மறக்கடித்துவிட்டது. வில்லனாக அறிமுகமாகி நல்ல பெயர் வாங்கியிருக்கும் ராக், இன்று ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்.

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் மோசமான ரசிகன் நான். ஏனெனில் அந்தத் திரைப்படத்தின் முதல் 4 பாகங்களை பார்த்து விட்டு காரை தாறுமாறாக ஓட்டி வம்பில் சிக்கியிருக்கிறேன். மொத்தம் 4 ஸ்பீட் டிக்கெட்டுகள் என்னிடம் உள்ளது. அந்தளவிற்கு கார் பைத்தியம் நான்’ என்று கூறும் ராக்... ‘சம்பள பணமே வேண்டாம், ஒரு சின்ன கதாபாத்திரம் மட்டும் தாருங்கள்’ என்ற கோரிக்கையுடன் தான் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்பட இயக்குனரின் வீட்டு படியேறியிருக்கிறார். இயக்குனரும் இசைந்து விட, இப்போது அந்தப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்–8 திரைப்படத்தின் டிரைலர் மிரட்டலாக இருப்பதாக கூறுகிறார்கள். நான் உறுதியளிக்கிறேன். டிரைலரை விட திரைப்படம் படு மிரட்டலாக இருக்கும். இதுவரை கதாநாயகனாக நடித்த டாம், இதில் வில்லத்தனம் செய்கிறார். அவரை சமாளிக்க 8 பேர் தேவைப்படுகிறது என்றால், அவரது சேட்டையை புரிந்து கொள்ளுங்கள். இப்படி மாறியதற்கு மியாவும், பிரைன் ஓ கார்னருமே காரணம். அதை ஏப்ரல் 14–ந் தேதி தெரிந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியவர், படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

‘டைரஸ் ரொம்பவும் குறும்புக்காரன். இதை செய்யாதே என்றால், அதைத் தான் செய்வான். நீர் மூழ்கி கப்பல் பனிப் பாறையை வெடித்துக்கொண்டு வரும் வகையில் ஒரு காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் டைரஸ் எனக்கு உதவவேண்டும். ஆனால் என்னைக் காப்பாற்றாமல் உறைய வைக்கும் குளிர்ந்த நீரில் தள்ளிவிட்டுவிட்டான். அவ்வளவு தான்.. 15 நாட்கள் குளிர் காய்ச்சலில் அவதிப்பட வேண்டிய தாகிவிட்டது. அப்போதாவது சும்மா இருந்தானா! மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தவன், என்னுடைய மகளிடம் இருந்த ஆர்.சி.ப்ளேனையும் எடுத்துச் சென்றுவிட்டான். அவள் என்னை முறைக்கிறாள்’ என்று சிரித்தபடியே கூறும் ராக், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸில் கிடைக்கும் பந்தம்.. எனக்கு வேறு திரைப்படங்களில் கிடைப்பதில்லை’ என்றும் நெகிழ்கிறார். ‘பால்வாக்கரின் இழப்பு நிச்சயம் இவர்களை பாதித் திருக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது’ என்று கூறுகிறார்.

பந்தய பயணம்..!

இன்று பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படமாக பார்க்கும் கதை... 1998–ம் ஆண்டு எழுதப்பட்ட ‘ரேஸர்–எக்ஸ்’ என்ற கதையின் தழுவல். இந்த கதையும், அமெரிக்காவில் திருட்டுத்தனமாக நடந்தேறிய கார் பந்தயங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.

பிரைன் ஓ கார்னராக நடிக்க ஏகப்பட்ட போட்டிகள் நிலவியது. பேட்மேன் திரைப்படத்தின் கதாநாயகன் கிறிஸ்டியன் பேல், பிரபல பாடகர் எமினம் ஆகியோர் போட்டியிட, அதிர்ஷ்டக் காற்று புதுமுக நடிகரான பால்வாக்கரின் பக்கம் வீசியிருக் கிறது. ஆனால் அதிர்ஷ்டம் இருந்த அளவிற்கு பால்வாக்கருக்கு ஆயுள் இல்லை. பாவம்! அதனால் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.



 டாமின் தங்கை மியாவாக நடிக்கும் ப்ரூஸ்டருக்கும், காதலியாக நடிக்கும் ரோட்ரிக்கசுக்கும் கார் ஓட்டிய அனுபவமே இல்லையாம். ஆனால் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப் படம் அவர்களை சிறந்த பந்தய வீரர்களாக மாற்றிவிட்டது.

மேலும் செய்திகள்