ஏரி, குளங்களை பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம்

ஏரி, குளங்களை பாதுகாப்பது என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம் தெரிவித்தார்.;

Update: 2017-03-17 22:45 GMT

புதுச்சேரி

புதுவை லாஸ்பேட்டையில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்க கூடத்தில் நீர்வள மேம்பாடு மற்றும் சீமை கருவேல மரங்களை அழித்தல் குறித்த கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு பேசியதாவது:–

எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் கடந்த கால அரசின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மாநிலத்தில் நிதி மேலா ண்மை, வசதி வாய்ப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு திட்டமிடுதல் மிகவும் அவசியம். திட்டமிட்டு செலவிடும்போதுதான் வெற்றியை அடைய முடியும்.

குடிநீரையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாப்பது எதிர்கால தலைமுறையினருக்கு நாம் சேமித்து வைக்கும் சொத்து ஆகும். நமது குழந்தைகளுக்கு நாம் பணத்தை சேர்த்து வைப்பது உண்மையான சொத்து அல்ல. அவர்களது சுத்தமான குடிநீரையும், நல்ல சுற்றுப்புற சூழலையும் காத்து வைப்பதுதான் சொத்து.

ஆக்கிரமிப்புகள்

நாம் மிகவும் சொகுசாக வாழ்ந்து பழகிவிட்டோம். தண்ணீரின் முக்கியத்துவத்தை அறியாமல் உள்ளோம். புதுச்சேரியில் 84 ஏரிகளும், 300–க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. அதில் ஒரு சில ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பாசன வாய்க்கால் பகுதிகளிலும் குடியிருப்புகள் உருவாகி உள்ளன.

பாசன வாய்க்கால்களை தூர்வார நமது முதல்–அமைச்சர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி தந்தார். மேலும் 20 ஏரிகளை தூர்வார ஒவ்வொரு ஏரிக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 80 சதவீத பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மக்கள் இயக்கம்

இதுபோன்ற பணிகளில் அரசு துறைகள் மட்டுமல்லாது மக்களும் ஈடுபாட்டோடு பங்கேற்க வேண்டும். மக்களின் உணர்வோடு கலந்து ஒரு மக்கள் இயக்கமாக மாறவேண்டும். தற்போது நிலத்தடி நீரில் கடல்நீர் புகுந்துள்ளது. இந்த கடல்நீர் ரெட்டியார்பாளையம் வரை புகுந்துள்ளது. மேலும் கடல் அரிப்பை தடுக்கவும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. ஏரி பாசன விவசாய பரப்பும் குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு விவசாயம் மூலம் போதிய வருமானம் இல்லாததால் நிலத்தை விற்று அதை வங்கிகளில் டெபாசிட் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

அமைச்சர்கள்

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், அரசு செயலாளர்கள் மிகிர்வரதன், பாபு, அரசுத்துறை இயக்குனர்கள் முகமது மன்சூர், ருத்ரகவுடு, துவாரகநாத், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சுவாமிநாதன், தலைமை வனக்காப்பாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஏரி பாதுகாப்பு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு நீர் வளமேம்பாடு மற்றும் சீமை கருவேல மரங்களை அழிப்பது தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்