இன்சூரன்ஸ், பி.யு.சி. போன்ற ஆவணங்களை ‘வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கேட்கக்கூடாது’ இணை போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

இன்சூரன்ஸ், பி.யு.சி. போன்ற ஆவணங்களை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் கேட்க கூடாது என போக்குவரத்து போலீசாருக்கு மும்பை இணை போலீஸ் கமி‌ஷனர் மிலிந்த் பராம்பே உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-03-17 22:29 GMT

மும்பை,

இன்சூரன்ஸ், பி.யு.சி. போன்ற ஆவணங்களை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் கேட்க கூடாது என போக்குவரத்து போலீசாருக்கு மும்பை இணை போலீஸ் கமி‌ஷனர் மிலிந்த் பராம்பே உத்தரவிட்டுள்ளார்.

இணை கமி‌ஷனர் உத்தரவு

மும்பையில் சமீப காலமாக வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாரை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதேப்போல போக்குவரத்து போலீசார் இன்சூரன்ஸ், மாசுகட்டுப்பாட்டு சான்றிதழ்(பி.யு.சி.) இல்லாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்கேட்டு மிரட்டுவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் இணை போலீஸ் கமி‌ஷனர், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் இன்சூரன்ஸ், பி.யு.சி., பசுமை வரி சான்றிதழ் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் வழங்காத ஆவணங்களை கேட்கவேண்டாம். சாலை விதிகளை மீறுபவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஊழலை தடுக்க...

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஊழலை தடுக்கும் வகையில் தேவையில்லாத ஆவணங்களை பரிசோதிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளோம். மேலும் பல்வேறு ஆவணங்களை போதிய ஆட்கள் இல்லாத நிலையில் போக்குவரத்து போலீசார் சோதிக்கும் போது நேரம் வீணாகிறது’ என்றார்.

இந்த உத்தரவு ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒழுங்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. முன்பும் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் அவை முறையாக பின்பற்றப்படவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்