சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க 50 இடங்களில் பள்ளம்தோண்டி வழித்தடங்கள் துண்டிப்பு

சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க 50 இடங்களில் பள்ளம் தோண்டி வழித்தடங்களை பொதுப்பணித்துறையினர் துண்டித்து வருகின்றனர்.

Update: 2017-03-17 22:30 GMT

வில்லியனூர்

புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியில் சங்கராபரணி ஆறு ஓடுகிறது. இங்கு சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் மாட்டுவண்டி மற்றும் டிராக்டர், லாரிகள் மூலம் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் வில்லியனூரில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது குறித்து கவர்னர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டும், வாகன தணிக்கையில் ஈடுபட்டும் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இருப்பினும் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடைபெற்றது. இதை தடுக்க முடியாமல் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் திணறினர்.

கவர்னர் உத்தரவு

இந்நிலையில் கவர்னர் கிரண்பெடி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் வில்லியனூர் தாசில்தார் மேத்யூ பிரான்சிஸ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன் மற்றும் செயற்பொறியாளர் தாமரைபுகழேந்தி ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர். ஆற்றில் இருந்து மணல் கடத்திச் செல்லும் வழித்தடங்களை பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டி, பாதையை துண்டிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்பேரில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் வில்லியனூர் ஆச்சார்யாபுரம் முதல் பிள்ளையார்குப்பம் அணைக்கட்டு வரை சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறும் 50 வழித்தடங்களை கண்டறிந்தனர்.

10 அடி ஆழத்துக்கு பள்ளம்

இந்த வழித்தடங்களில் சுமார் 10 மீட்டர் நீளமும், 10 அடி ஆழமும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் ஆற்றில் இருந்து மணல் திருடுவது தடுக்கப்படும், இதையும் மீறி மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்