‘விவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி’ நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் பேட்டி

‘‘விவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை, எதிர்க்கட்சியினரின் அரசியல் சூழ்ச்சி’’ என்று நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

Update: 2017-03-17 22:12 GMT

மும்பை,

‘‘விவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை, எதிர்க்கட்சியினரின் அரசியல் சூழ்ச்சி’’ என்று நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் தள்ளுபடி செய்யுங்கள்

நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கை, அரசியல் சூழ்ச்சி. விவசாயிகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. சட்டசபையின் அலுவல் பணியை முடக்கினால், தங்களது 15 ஆண்டுகால தவறான ஆட்சியை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் நலனுக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில், அவர்களது செயலற்ற தன்மை குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும். முதலில் கர்நாடக மாநிலத்தில் விவசாய கடனை காங்கிரஸ் தள்ளுபடி செய்யட்டும்.

என்ன உத்தரவாதம்?

விவசாயிகளின் கடன் சுமையை நிரந்தரமாக போக்க அரசு சாதகமாக இருக்கிறது. அதேசமயம், விவசாயிகள் மீண்டும் கடன் வலையில் சிக்கிக்கொள்ள கூடாது என்ற சூழலை உருவாக்கவும் அரசு விரும்புகிறது.

பெரும்பாலான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசால் தான் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோரிக்கையின் உண்மையான நோக்கம், வங்கிகளின் பாக்கியை நீர்த்துபோக செய்ய வேண்டும் என்பதே ஆகும். இந்த வங்கிகள் விவசாய கடன் தள்ளுபடி நிதியை விவசாயிகளின் கணக்கிற்கு மாற்றும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

இவ்வாறு சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்