முல்லுண்டில் ரூ.1 கோடி பழைய நோட்டுகளுடன் 5 பேர் கைது

முல்லுண்டில் ரூ.1 கோடி பழைய நோட்டுகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-03-17 23:00 GMT

மும்பை,

முல்லுண்டில் ரூ.1 கோடி பழைய நோட்டுகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழைய ரூபாய் நோட்டுகள்

மும்பை முல்லுண்டு மேற்கு, தால்மியா தெரு, பரமேஷ்வர் சென்டர் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுடன் வருவதாக முல்லுண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு 5 பேர் கையில் இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 5 பேரையும் பிடித்து, அவர்களிடம் இருந்த பைகளை திறந்து சோதனையிட்டனர். இதில் அந்த பைகளுக்குள் கட்டு, கட்டாக பழைய ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணி பார்த்தபோது, அதில் ரூ.99 லட்சத்து 80 ஆயிரத்துக்கான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் ஹரிஷ் விஜய், விபுல் ஜைன், மல்லை சுரேஷ், குன்ஞ் பட்டேல் மற்றும் கிருஷ்ணகுமார் வேல் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்