துமகூரு அருகே ஓடும் தனியார் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் சாவு உயிருக்கு போராடிய போதும் பிரேக் பிடித்து 30 பயணிகளை காப்பாற்றினார்

துமகூரு அருகே ஓடும் தனியார் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் உயிர் இழந்தார். அவர், உயிருக்கு போராடிய போதும் ‘பிரேக்‘ பிடித்து பஸ்சை நிறுத்தி 30 பயணிகளை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-03-17 20:42 GMT

பெங்களூரு,

துமகூரு அருகே ஓடும் தனியார் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் உயிர் இழந்தார். அவர், உயிருக்கு போராடிய போதும் ‘பிரேக்‘ பிடித்து பஸ்சை நிறுத்தி 30 பயணிகளை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

டிரைவர் சாவு

துமகூரு மாவட்டம் மதுகிரியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56). இவர், தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஆந்திராவில் இருந்து தனியார் பஸ்சை துமகூருவுக்கு நாகராஜ் ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தார்கள். நேற்று காலை 7.30 மணியளவில் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா பட்டநாயக்கனஹள்ளி அருகே லக்கனஹள்ளி மெயின் ரோட்டில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் நாகராஜிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார்.

அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் இருந்த பெரிய பள்ளத்தை நோக்கி போனது. இதனை கவனித்த கண்டக்டர், நாகராஜ் அருகில் சென்றார். அதற்குள் நாகராஜ், பஸ்சை ‘பிரேக்‘ பிடித்து சாலையோரம் நிறுத்திவிட்டு ‘ஸ்டீரிங்‘ மீது விழுந்தார். பின்னர், கண்டக்டர் உள்பட பஸ்சில் இருந்தவர்கள் நாகராஜை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

30 பயணிகள் தப்பினர்

இதுபற்றி அறிந்ததும் பட்டநாயக்கனஹள்ளி போலீசார் விரைந்து வந்து டிரைவர் நாகராஜ் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அப்போது நாகராஜிக்கும் மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிர் இழந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதும் உயிர் இழக்க போவதை உணர்ந்த நாகராஜ், பஸ்சின் பிரேக்கை பிடித்து நிறுத்தி விபத்தில் சிக்காமல் பார்த்து கொண்டதுடன், 30 பயணிகளின் உயிரையும் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து பட்டநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்