ஜெனரேட்டரில் இருந்து வெளியான நச்சுப்புகையால் மூச்சுத்திணறி 5 தொழிலாளிகள் பலி திருமண வீட்டில் பந்தல் அமைக்க சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
லிங்க்சூர் தாலுகாவில், திருமண வீட்டில் பந்தல் அமைக்க சென்ற தொழிலாளிகள் 5 பேர் ஜெனரேட்டரில் இருந்து வெளியான நச்சுப்புகையால் மூச்சுத்திணறி பலியானார்கள்.
மங்களூரு,
லிங்க்சூர் தாலுகாவில், திருமண வீட்டில் பந்தல் அமைக்க சென்ற தொழிலாளிகள் 5 பேர் ஜெனரேட்டரில் இருந்து வெளியான நச்சுப்புகையால் மூச்சுத்திணறி பலியானார்கள்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தொழிலாளிகள்கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்க்சூர் தாலுகா கரடுக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சசிக்குமார்(வயது 20), ஆஜப்பா(17), மவுலாளி(20), மவுலப்பா(20) மற்றும் சுரேஷ். கூலித்தொழிலாளிகளான இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்க சென்றனர்.
அங்கு அவர்கள் பந்தல் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜெனரேட்டரை போட்டுவிட்டு வேலை செய்தனர். பந்தல் அமைக்கப்பட்ட பிறகு, மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது. வேலைகள் அனைத்தும் இரவு வரை நடந்தது. இதையடுத்து சசிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஜெனரேட்டர் அறையிலேயே படுத்து தூங்கிவிட்டனர். மேலும் அந்த அறையின் கதவையும் உள்பக்கமாக அடைத்துவிட்டனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் ஜெனரேட்டரும் ஓடிக் கொண்டே இருந்தது.
மூச்சுத்திணறி...இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் 5 பேரும் ஜெனரேட்டர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டினர், அந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சசிக்குமார், ஆஜப்பா, மவுலாளி, மவுலப்பா ஆகிய 4 பேரும் மயங்கிய நிலையில் இருந்தனர். சுரேஷ் மட்டும் மூச்சுத்திணறியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
5 பேர் பலிஇதையடுத்து அங்கிருந்தவர்கள், சசிக்குமார் உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு லிங்க்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சசிக்குமார், ஆஜப்பா, மவுலாளி, மவுலப்பா ஆகிய 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சுரேசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்து போனார். இதனால் இந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 5–ஆக உயர்ந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு லிங்க்சூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெனரேட்டரில் இருந்து வெளியான நச்சுப்புகையால் 5 பேரும் மூச்சுத்திணறி பலியானது தெரியவந்தது.
சோகம்இதையடுத்து போலீசார் சசிக்குமார் உள்பட 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண வீட்டிற்கு பந்தல் அமைக்க சென்ற தொழிலாளிகள் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.