வாடகை பாக்கி வைத்த 9 கடைகளுக்கு சீல், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கூடலூரில் வாடகை பாக்கி வைத்த 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2017-03-17 22:15 GMT

கூடலூர்

கூடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு சொந்தமாக 145 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை பாக்கி வசூலாகாமல் இருந்தது. இதனால் பாக்கி தொகைகளை உடனடியாக செலுத்துமாறு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். இருப்பினும் பெரும்பாலான கடைகளின் வாடகை வசூல் ஆகாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு நகராட்சி வரி வருவாய் ஆய்வாளர் காதர்பாஷாகான், ஸ்ரீஜித் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் வாடகை பாக்கி வைத்துள்ள கடை உரிமையாளர்களிடம் பணம் வசூலித்தனர். அப்போது நீண்ட நாட்களாக பாக்கியை செலுத்தாமல் நிலுவையில் உள்ள 9 கடைகளை இழுத்து மூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடகை பாக்கி

இதைத்தொடர்ந்து மீதமுள்ள கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கியை அலுவலர்களிடம் செலுத்தி அதற்கான ரசீதை பெற்று கொண்டனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி ரோடு, பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள 9 கடை உரிமையாளர்கள் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 41 வாடகை பாக்கி வைத்து இருந்தனர். பலமுறை வலியுறுத்தியும் பணம் செலுத்தாததால் அந்த கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் குடிநீர், சொத்து வரி பாக்கி வைத்துள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்