தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 116 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-17 23:15 GMT

தேனி

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கடந்த 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் முடங்கி உள்ளன. ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

116 பேர் கைது

இந்த போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, செயலாளர் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 26 பெண் அலுவலர்கள் உள்பட 116 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக தேனி–மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்