நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டி நூதன போராட்டம்

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-17 20:30 GMT

நெல்லை,

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்கள் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு திரண்டு வந்தநர். அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு தற்போது 1 நாளைக்கு ரூ.228 சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியமாக ரூ.692 வழங்க வேண்டும். 2 ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரை பணிபுரியும் சுயஉதவிக்குழு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சம்பளத்துடன் வார விடுமுறை

இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். மாநகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு கணக்குப்படி 2,500 துப்புரவு தொழிலாளர்களை பணி அமர்த்த வேண்டும். சுயஉதவிக்குழு தொழிலாளர்களுக்கு சீருடை, செருப்பு, கையுறை, கால் உறை, சம்பளத்துடன் வார விடுமுறை, பொங்கல் கருணை தொகை ஆகியவை வழங்க வேண்டும்.

வேலை செய்ய தேவையான மண்வெட்டி, குப்பை டப்பா, தள்ளுவண்டி, துடைப்பம், பழுதான தள்ளுவண்டிக்கு பழுதுநீக்கும் செலவு தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கை மனு

இந்த போராட்டத்துக்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க(சி.ஐ.டி.யு) தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியனை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்