நெல்லை சந்திப்பில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல்; 180 பேர் கைது

நெல்லை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2017-03-18 02:30 IST

நெல்லை,

நெல்லை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊரக வளர்ச்சி அலுவலர்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 14–ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாயத்து செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பஞ்சாயத்து செயலாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல்

போராட்டத்தின் 4–வது நாளான நேற்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் மதுரை ரோட்டில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகசுந்தரம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குமாரவேல், அனைத்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி துரை டேனியல், வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி குருச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சந்திப்பு பஸ் நிலையம் எதிரே திரண்டிருந்த அவர்கள் மெயின் ரோட்டுக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

180 பேர் கைது

பெண் அலுவலர்கள் உள்பட மொத்தம் 180 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் போலீஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்