தங்க காசுகள் என கூறி செப்பு காசுகளை விற்று ரூ.70 ஆயிரம் மோசடி செய்த கும்பலை சாமர்த்தியமாக பிடித்த கல்லூரி மாணவி நண்பர்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார்

தங்க காசுகள் என கூறி செப்பு காசுகளை தந்தையிடம் விற்று ரூ.70 ஆயிரம் மோசடி

Update: 2017-03-17 23:30 GMT

திருவையாறு,

மோசடி

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள சின்ன கண்டியூரை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவருடைய மகள் துர்காதேவி (வயது20). இவர் தஞ்சையில் உள்ள அரசு கல்லூரியில் 3–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவி தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு முதியவர் தனது மனைவியுடன் வந்து சாப்பாடு வேண்டும் என கேட்டார். இதனால் மனமிரங்கிய ரவி, அந்த தம்பதியினரை வீட்டுக்கு அழைத்து சென்று சாப்பாடு அளித்தார். இதுபோல் தொடர்ந்து அவர்கள் ரவி வீட்டில் சாப்பிட்டு வந்தனர்.

அம்மி கல், ஆட்டு கல் கொத்தும் வேலை செய்து வருவதாக கூறிய அந்த தம்பதியினர் தங்களிடம் தங்க காசுகள் இருப்பதாகவும், அதை விற்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து ரவியிடமே அந்த தங்க காசுகளை ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்தனர். பின்னர் அந்த தங்க காசுகளை பரிசோதித்து பார்த்தபோது அவை செப்பு காசுகள் என்பதும், வயது முதிர்ந்த தம்பதியினர் ஏமாற்றி பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது.

தங்க காசுகளை விற்கும்போது அந்த முதியவர் ரவியின் கையில் ஏதோ ஒரு மர்ம பொடியை தடவியதாகவும், இதனால் ரவி சுய நினைவை இழந்த நிலையில் பணத்தை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த தம்பதியினர் மாயமாகி விட்டனர்.

பஸ்சில் பயணம்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு சென்ற துர்காதேவி மாலை வீடு திரும்புவதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தனது தோழிகளுடன் காத்திருந்தார். அப்போது திருச்சி செல்லும் பஸ்சில் தனது தந்தையை ஏமாற்றிய தம்பதியினர், 3 பேருடன் அமர்ந்து இருப்பதை பார்த்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட துர்காதேவி, தம்பதியினரை பிடிக்க முடிவு செய்து, தனது தோழிகளுடன், தம்பதி அமர்ந்திருந்த பஸ்சில் ஏறினார்.

அந்த தம்பதி தன்னை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாதபடி தனது முகத்தை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டு தம்பதி சென்ற பஸ்சில் தோழிகளுடன் பயணம் செய்ய தொடங்கினார். அந்த தம்பதியினர் எங்கு செல்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக துர்காதேவி, பஸ் கண்டக்டரிடம் விசாரித்தார். இதில் தம்பதி மற்றும் அவர்களுடன் இருந்த 3 பேர் உள்பட 5 பேரும் தஞ்சையை அடுத்த வல்லத்துக்கு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து தனது தந்தை ரவி மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு செல்போனில் துர்காதேவி தகவல் தெரிவித்தார். இதன்பேரில் மாணவர்கள் மோட்டார்சைக்கிளில் முன்னதாகவே வல்லத்துக்கு சென்று மோசடி கும்பலுடன், துர்காதேவி வரும் பஸ்சுக்கு காத்திருந்தனர்.

நண்பர்கள் உதவியுடன்...

வல்லத்தில் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் தம்பதி உள்பட 5 பேரையும் துர்காதேவி தனது நண்பர்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்து, வல்லம் போலீசில் ஒப்படைத்தார். வல்லம் போலீசார், அவர்களை திருவையாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் திருவையாறு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த தம்பதியினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சப்பாணி(80), அவருடைய மனைவி ஏழாம்பாள்(65) ஆகியோர் என்பதும், இவர்களுடன் வந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன்(60), அவருடைய மனைவி அரசி(55), லோகநாதன்(45) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் ரவியிடம் தங்கம் என்று கூறி செப்பு காசுகளை விற்று ரூ.70 ஆயிரம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் இதேபோல் வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் இணைந்து சாமர்த்தியமாக செயல்பட்டு மோசடி கும்பலை பிடித்துக் கொடுத்த கல்லூரி மாணவி துர்காவை போலீசார் பாராட்டினர்.

மேலும் செய்திகள்