திருவண்ணாமலையில் அரசு கலை கல்லூரி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்திருவண்ணாமலை செங்கம் சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.
நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ–மாணவிகள் காலை 8 மணியளவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து வந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை தலைவர் நந்தினி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சுந்தமூர்த்தி வரவேற்றார்.
ரூ.25 லட்சம் நிதியுதவிஇதில் மாணவர் முத்துகிருஷ்ணன் மர்ம மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். முத்துகிருஷ்ணன் குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். முத்துகிருஷ்ணன் சகோதரிகளுக்கு படிப்புக்கு தகுந்த அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் மாணவ–மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர்.