மழைநீரை சேமிக்க மலைப்பகுதிகளில் 500 மீட்டர் இடைவெளியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

மழைநீரை சேமிக்க மலைப்பகுதிகளில் 500 மீட்டர் இடைவெளியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை வைத்தார்.

Update: 2017-03-17 21:45 GMT

திருவண்ணாமலை

மழைநீரை சேமிக்க மலைப்பகுதிகளில் 500 மீட்டர் இடைவெளியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை வைத்தார்.

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், விவசாயிகளின் பிரதிநிதிகள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

வறட்சி நிவாரண உதவித்தொகை

புதுப்பாளையம் கிருஷ்ணன்:– புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலசபாக்கம் கதிரேசன்:– திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவித்தொகை அரசு எவ்வளவு ஒதுக்கியது? என்று தெரிவிக்க வேண்டும். அதேபோல் ரே‌ஷன் அட்டையில் ஆதார் எண்ணை பதிவு செய்யாத பல பேரின் ரே‌ஷன் அட்டைகள் செல்லாது எனக்கூறி அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை. கலசபாக்கம் தாலுகாவில் ரூ.25 லட்சம் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் பழனி:– ஊழல் தொடர்பாக மனு அளித்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணைகள்

கலசபாக்கம் சுரேஷ்:– மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மழைநீரை சேமிக்க 500 மீட்டர் இடைவெளியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். கேட்டவரம் பாளையம் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. கலசபாக்கம் பகுதியில் விவசாயிகள் அதிகளவு உள்ளதால் கால்நடை உலர்தீவன மையங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் பழனி:– மாவட்டம் முழுவதும் தடுப்பணை அமைப்பது தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. மழைநீரை சேமிக்க மலைப்பகுதிகளில் விரைவில் தடுப்பணை கட்டப்படும்.

தண்டராம்பட்டு பழனி:– மத்திய அரசு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் 2 மாத பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. தண்டராம்பட்டில் உள்ள தேசிய வங்கியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது குறித்து கேட்டால் மத்திய அரசிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்று கூறுகிறார்கள். மத்திய அரசு அறிவித்த திட்டத்தை தேசிய வங்கிகள் ஏன் செயல்படுத்த மறுக்கிறது.

தண்டராம்பட்டு பகுதியில் சொட்டுநீர் பாசனம் அமைக்க அதிகாரிகள் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள். சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே பாசனம் அமைக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள்:– கூட்டுறவு சங்கங்களில் நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

சொட்டு நீர் பாசனம்

தண்டராம்பட்டு ராஜா:– தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் நலத்திட்டங்கள், மானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பயன்அளிக்கும் சொட்டுநீர் பாசனம் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் பழனி:– மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

செங்கம் தாமஸ்:– செங்கம் பகுதியில் 100 அடிக்கு ஒரு ஆழ்துளை கிணறு என விவசாய நிலங்களில் போடப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் தடுக்க வேண்டும். வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் மிகவும் குறைந்த நிலையில் விவசாயிகள் தொடர்ந்து அருகருகே ஆழ்துளை கிணறுகள் அமைத்து வருகிறார்கள்.

செங்கம் அருகேயுள்ள சுண்ணாம்பு ஒடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் பழனி:– சுண்ணாம்பு ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

வந்தவாசி அண்ணாமலை:– தெள்ளாறு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்தவாசி தாலுகாவில் உள்ள 62 ஊராட்சிகளில் 627 விவசாயிகள் மட்டும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு பதிவேட்டில் உள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். தெள்ளாறில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் பழனி:– வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தெள்ளாறில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்