கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு: உதவி கலெக்டர் தலைமையில் நடந்த அமைதிபேச்சுவார்த்தை தோல்வி கிராம மக்கள் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு

திருச்சென்னம்பூண்டியில் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து

Update: 2017-03-17 22:45 GMT

தஞ்சாவூர்,

கொள்ளிடம் ஆறு

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கூட்டு குடிநீர் திட்டம் அமைத்தால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என திருச்சென்னம்பூண்டி, கோவிலடி கிராமத்தை சேர்ந்த மக்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 15–ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அமைதி பேச்சுவார்த்தை

இதையடுத்து இந்த திட்டம் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை உதவி கலெக்டர் சுரேஷ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிபேச்சுவார்த்தை தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சுரேஷ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பூதலூர் தாசில்தார் கஜேந்திரன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கிராம மக்கள் சார்பில் வக்கீல் ஜீவக்குமார், காந்தி, சிவசாமி, துரைராஜ், முருகேசன், ரமேஷ், ராஜேந்திரன், ராஜாபரமசிவம், நாகராஜன், சேவு, சண்முகம் மற்றும் விவசாயிகள், பெண்கள், கிராமமக்கள் என 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கிராம மக்கள் ஏற்க மறுப்பு

கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் இல்லாத நிலை ஏற்படக்கூடாது. எனவே தண்ணீர் எடுக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை கிராம மக்கள், விவசாயிகள் ஏற்கவில்லை.

இதையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ஜீவக்குமார் மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘‘வேறு மாவட்டத்திற்கு குடிநீர் கொடுப்பதை வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. எங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மழை பெய்து செழித்த காலத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் இப்போது தண்ணீர் எடுக்க அனுமதிக்ககூடாது என்று கூறிவிட்டு நாங்கள் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறி விட்டோம். இதனால் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது’’என்றனர்.

மேலும் செய்திகள்