திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு மணல் கடத்திய 2 லாரிகள், கார் பறிமுதல் டிரைவர் கைது; 4 பேர் தலைமறைவு

திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு மணல் கடத்திய 2 லாரிகள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-03-17 23:00 GMT

காரிமங்கலம்.

வாகன தணிக்கை

திருச்சியில் இருந்து காரிமங்கலம் வழியாக பெங்களூருவுக்கு மணல் கடத்துவதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காரிமங்கலம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் காரிமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது காரிமங்கலம்–அகரம் சாலையில் வந்த ஒரு 2 லாரிகளை போலீசார் நிறுத்தி ஒரு டிரைவரிடம் விசாரணை நடத்தினர். ஓசூரில் இருந்து திருச்சிக்கு காய்கறிகள் ஏற்றி செல்லும் லாரிகள் என்று டிரைவர் கூறி உள்ளார். இதற்கிடையில் மற்றொரு லாரியில் இருந்த டிரைவர் போலீசுக்கு பயந்து தப்பி ஓடினார். மேலும் இந்த 2 லாரிகளுக்கு பின்னால் வந்த ஒரு காரில் இருந்த வந்தவரும் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு ஓடினார்.

டிரைவர் கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 லாரிகளையும் சோதனை செய்தனர். அப்போது காய்கறி மற்றும் தக்காளி பெட்டிகளை அடுக்கி வைத்து 2 லாரிகளிலும் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசாரிடம் சிக்கிய லாரி டிரைவர் ஓசூர் பேரண்டப்பள்ளியை அடுத்த ஆழ்வார்தின்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது32) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் ராயக்கோட்டையை சேர்ந்த சதீஸ்குமார்(27), நாகப்பன்(36), பாலக்கோடு அடுத்த காட்டுசெட்டிப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(34) மற்றும் லாரி உரிமையாளர் ஆழ்வார்தின்னூரை சேர்ந்த சீதாராமன்(45) என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் லாரி டிரைவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். தலைமறைவான லாரி உரிமையாளர் சீதாராமன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் 2 லாரிகள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்